வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஏறியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் 1/4 கிலோ வாங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சென்னையில் இரு வாரங்களாகியும் வெங்காயம் விலை குறைந்தபாடில்லை.இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது ஒரு காரணமாக இருந்தாலும், விளைச்சலில் முதல் மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த மழையால் வெங்காய பயிர்கள் மற்றும் இருப்பு வைத்திருந்த வெங்காயமும் அழுகிவிட்டன.
வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தினமும் 70 லாரி வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது வெங்காயம் வரத்து தினமும் 30 லாரியாக குறைந்துவிட்டது.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்துகொண்டிருந்த வெங்காயத்தின் அளவும் அடியோடு குறைந்துவிட்டது.
வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என்று தங்கம் விற்பனையாவது போல ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை விலையை உயர்த்தி கோயம்பேடு மொத்தவியாபாரிகள் விற்பனை செய்வதாக சில்லரை வியாபாரி ஒருவர் கூறினார்.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் பெரிய வெங்காயத்திற்கு இணையாக கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனைசெய்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது. இலங்கையில் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.180க்கு விற்பனையாகிறது.
பாகிஸ்தான் நாட்டில் பெரிய வெங்காயம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
வெங்காயம் விலை குறைவாக இருந்தபோது பொதுமக்கள் தாராளமாக ஒருகிலோ, இரண்டு கிலோ என்று வீடுகளுக்கு வாங்கிச்சென்றார்கள். தற்போது கடுமையான விலை உயர்வால் சில்லரை கடைகளில் 1/4 கிலோ, 1/2 கிலோ வாங்கும் பரிதாப நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




