இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சுவர் ஏறிக் குதித்து தப்பித்து குழந்தை தொழிலாளர் சிறுமிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

E-mail அச்செடுக்க

அவிநாசி அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில், கடுமையாக வேலை வாங்கியதன் காரணமாக, எட்டு குழந்தைத் தொழிலாளர் சிறுமிகள் உட்பட ஒன்பது பேர் தப்பி ஓடி, மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குன்னத்தூர் - ஊஞ்சப்பாளையத்தில், தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று உள்ளது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் திங்கள் இரவு 11.00 மணிக்கு, மில் ஹாஸ்டலில் இருந்து 10 சிறுமியர் உட்பட 11 பேர், சுவர் ஏறி குதித்து தப்பினர்.
அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். தப்பி ஓடும் போது, இருவர் வழி தவறி சென்று விட்டனர். அவ்வழியே வந்த ஒருவர், சிறுமியரை குன்னத்தூர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தார். தப்பியவர்களில் பெரும்பாலோர் சிறுமியர் என்பதால், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறுமியரிடம் டி.எஸ்.பி. பழனிசாமி விசாரணை செய்தார். அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு, நாகவள்ளி, கருப்பாயி, சத்யா, செல்வி, சாவித்திரி, சத்யாகுமாரி, நந்தினி என்பது தெரிந்தது. தொழிலாளர் நல ஆய்வாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜ் தலைமையில், வட்டார ஆய்வாளர் ரமேஷ், தொழிற்சாலை ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கொண்ட குழுவினர், அவிநாசி காவல் நிலையத்திற்கு  சென்றனர். இந்த ஒன்பது பேரில், எட்டு பேர் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர் என்பது கண்டறியப்பட்டது. சிலரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சிறுமிகள்  கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், கார்குப்பம், அய்குந்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 பேரை, ஸ்பின்னிங் மில் வேலைக்கு, ஏஜன்ட் ராஜா என்பவர் அழைத்து வந்தார். மில்லில், வார்டன் ஸ்ரீதேவி என்பவர், எங்களை அடிக்கடி அடிப்பார். காலையில் இருந்து இரவு வரை, நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். உட்கார்ந்தால் அடிப்பார். மில் மிஷினில் உள்ள பஞ்சுகளை, "பம்ப்” மூலம் சுத்தம் செய்யும் போது பலருக்கும் காயம் ஏற்படும். மிகவும் கஷ்டமாக இருப்பதாக சொல்லியும் கூட, ஊருக்கு அனுப்பவில்லை. வேறு வழி தெரியாமல், சுவர் ஏறிக் குதித்து தப்பினோம். இன்னும் பலர் அங்கு உள்ளனர். அவர்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜிடம் கேட்ட போது, "குன்னத்தூர் அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களுக்கு, மருத்துவமனையில் வயது சான்றிதழ் பெற்றுள்ளோம். எட்டு பேர், குழந்தைத் தொழிலாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் கூறிய தகவல் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மில்லில் ஆய்வு நடத்த உள்ளோம். குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

ஸ்பின்னிங் மில்லில் இருந்து மொத்தம் 11 பேர் தப்பினர். ஆனால் ஒன்பது சிறுமியர் மட்டுமே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஓடும்போது மில் உரிமையாளரின் ஆட்கள் அங்கு வந்ததால், முரளி, ஈஸ்வரி ஆகியோர் வழி தவறி விட்டனர். இதுவரை அவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை.

காணாமல் போன முரளியின் தங்கை மஞ்சு கூறுகையில்,"நாங்கள் அனைவரும் ஒன்றாக சுவர் ஏறிக் குதித்து தப்பினோம். என் அண்ணன் முரளி, ஈஸ்வரி ஆகியோர், இருட்டில் வழிமாறிச் சென்று விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்