சிகாகோ: சிகாகோ மாநகரத்தை சுற்றி குடியிருக்கும் நகரங்களின் ஒருங்கிணைந்த தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டு விழா 2011 மே 15ம் தேதியன்று புனித அலக்ஸ்சான்டர் பள்ளியின் உள்ளரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடங்கமாக திருக்குறள் மற்றும் தமிழ்தாய் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி தொடங்க, தமிழ்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் பாபு வரவேற்புரையாற்றினார். ஆண்டு விழாவில் சிகாகோ மாநகரத்தைச் சுற்றி செயல்படும் தமிழ் பள்ளிகளான டெசுபிளெய்ன்சு தமிழ்பள்ளி, டேரியன் தமிழ்பள்ளி, மில்வாக்கி தமிழ்ப்பள்ளி, மன்சுடர் தமிழ்ப்பள்ளி, நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி சாம்பர்க் தமிழ்ப்பள்ளி, சாம்பெய்ன்சு தமிழ்ப்பள்ளி, கெர்ணி தமிழ்ப்பள்ளி மற்றும் பியோரியா தமிழ்ப்பள்ளி போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் தமிழ் ஆர்வத்தின் வெளிப்பாடாக பல்வேறு தமிழ்மொழி திறமை, தமிழர் கலச்சாரம் மற்றும் பண்பாடு நினைவு கூறுதல், சங்க கால இலக்கியத்தின் பிரதிபலிப்பு நிகழ்வுகள், தமிழர்களின் தனித்திறன் மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடு என்று பல்சுவை விருந்தாக அளித்து பெற்றோர்களையும் விழாவிற்கு வந்திருந்தவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்ற புரட்சிக்கவிஞர் தமிழ் தேடலை உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த ஆர்வமும், எழுச்சிமிக்க வேட்கையும் குறையா வண்ணம் தமிழ் மொழியைக் கம்பீரமாக அமெரிக்கா நகரங்களில் ஒலிக்க செய்த தமிழ்ப்பள்ளிகளின் சேவை பாராட்டப்பட வேண்டிய செயல். இப் பள்ளிகளில் தமிழ் மொழிக்குப் பாடுபடும் ஆசிரியர், ஆசிரியை பெருமக்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டு கவரவிக்கப்பட்டார்கள்.
அரங்கம் முழுவதும் நடப்பு சங்க காலத்தின் தமிழ் அறிஞர்கள் பற்றி குறிப்புடன் கூடிய புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பலதரப்பட்ட உணவு வகைகளுடன் கூடிய மதியஉணவு மற்றும் சிற்றுண்டி உணவுகளுடன் வழக்கம் போல் தமிழர்களின் விருந்தோம்பல் நிகழ்வும் நடைப்பெற்றது.
விழாவின் இறுதியில் முரளி நன்றி கூறினார். தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் பாபு இலங்கையில் தமிழ் இன அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததைக் கண்டித்ததுடன் தமிழர்களின் இனம் மேலும் வளர வாழ்த்தி விழா நிறைவுரையாற்ற, குறித்த நேரத்தில் விழா இனிதே நிறைவு பெற்றது.
- தோப்புத்துறை அ. முஹம்மது நூர்தீன், அமெரிக்காவிலிருந்து…

| அடுத்தது > |
|---|





"எங்கள் வாழ்வும் ..எங்கள் வளமும் ..மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" - பாரதியார்
அன்புடன்
-பிரசாத் ராஜாராமன்.