நடிகர் விஜய் நடித்த வெற்றிப்படத்தை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சென்னை விமான நிலையத்தில் ஆந்திர மாநில சிபி-சிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முதல் நாள் வியாழன் அன்று மாலை ரமேஷ் பாபுவின் மனைவி ரேணுகா ஹைதராபாத்திலிருந்து ஒரு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். அவரை அழைத்து வர அவரது கார் ஓட்டுநர் விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது சாதாரண உடையிலிருந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் நெருங்கி, ரமேஷ் பாபு எங்கிருக்கிறார் எனக் கேட்டுள்ளனர்.
ரேணுகா ரமேஷ் பாபுவை கைப்பேசியில் அழைத்து விபரத்தைச் சொன்னார். சிறிது நேரத்தில் ரமேஷ் பாபு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். விசாரித்த கும்பல் ரமேஷ் பாபுவை அழைதுச் சென்றுவிட்டனர்.
அதிர்ச்சியுற்ற ரேணுகா விமான நிலைய காவலர்களிடம் விபரத்தை கூறியுள்ளார். அவர்கள் சில விசாரிப்புகளை செய்தபின் ரேணுகாவிடம், ஆந்திர மாநில சிபி-சிஐடி காவலர்கள் ரமேஷ் பாபுவை அழைத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
ஹைதராபாத்திலுள்ள ஒரு ஃபைனான்சியர் ரமேஷ் பாபுவிற்கு பெரும் தொகையை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் ரமேஷ் பாபு அதை திருப்பித் தரவில்லை. எனவே அவர் ஆந்திர காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஆந்திர மாநில சிபி-சிஐடி காவலர்கள் ரமேஷ் பாபுவை கைது செய்து கொணடுசென்றுள்ளனர்.
சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதியவில்லை என செயிண்ட் தாமஸ் மவுண்ட் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| அடுத்தது > |
|---|




