இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!(வீடியோ)

E-mail அச்செடுக்க

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவ முடியுமா? என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

Dim lights

நன்றி: ராஜ் டிவி

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கல்விக்கண் திறந்துகொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆகவேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

- அதிரைக்காரன் ஜமால்

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: அருணகிரி, July 25, 2011
1200க்கு 1,171 மதிப்பெண்கள் எடுத்து கூலி வேலையா...? அய்யோ கேட்பதற்கே கஷ்டமா இருக்கே இதெல்லாம் இந்த அரசியல் வாதிங்களுக்கு தெரியவில்லையா...?



0
...
எழுதியவர்: அருள், July 25, 2011
என்னங்கய்யா இது அநியாயமா இருக்கு?

குடியிருக்கச் சொந்தமாக இருப்பிடம்கூட இல்லாத அளவுக்கு ஏழ்மை நிலையிலுள்ள ஒரு மாணவர் 198 கட் ஆஃப் மார்க் எடுத்துள்ள நிலையில் அவருக்கு முழு கல்வியையும் இலவசமாக வழங்கவேண்டிய கடமை இந்த அரசுக்கு இல்லையா? இதையெல்லாம் கவனிக்காமல் இந்த அரசுகள் என்ன புடிங்கிக்கொண்டா இருக்கிறது?

தகுதியில்லாதவர்கள் பணத்தைக்கொட்டிக்கொடுத்து மருத்துவர்களாவதைத்தான் இந்த அரசுகளும் விரும்புகிறதா? தகுதியுள்ளவர்கள் மருத்துவர்களானால் அல்லவா தரமான மருத்துவம் மக்களுக்கும் கிடைக்கும்! தரமான மருத்துவம் மக்களுக்குக்கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமையிலுள்ள அரசுகள், இதுபோன்று நன்கு தகுதிபடைத்த மாணாக்கருக்கு இலவசமாக கல்வியினை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?

இந்த மாணவர் மருத்துவம் முடிக்க அதிகப்பட்சம் ஒரு 5 லட்சம் ரூபாய்த் தேவைப்படுமா? லட்சம் கோடிகளில் ஊழல் செய்துகொண்டும் சுவிஸ் வங்கிகளில் வரி ஏய்ப்பு செய்து கறுப்புப்பணங்களைக் கொட்டியும் வைத்திருக்கும் ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வியாதிகள், தாங்கள் செய்யும் அக்கிரமங்களுக்குப் புண்ணியம் சேரும் விதத்திலாவது இதுபோன்ற தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவமாக முழு கல்வியும் கிடைக்க வழி செய்யக்கூடாதா?

கியூபா, இலங்கை போன்ற நாடுகளில்கூட உயர் கல்விகள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், நம் நாட்டில் தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்கு மட்டுமாவது உயர் கல்விகளை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா?

சரி, அதெல்லாம் இருக்கட்டும்!

குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவசமாக உயர் கல்விக்குத் தமிழக அரசு உதவும் என்றொரு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததே? அந்தத் திட்டத்தின்கீழ் கூட இம்மாணவருக்கு அரசு உதவி கிடைக்காதா என்ன?

அரசு இம்மாணவரை முழுமையாக தத்தெடுத்துக்கொண்டு முழு கல்வியும் இலவசமாக வழங்கவேண்டும்! மக்கள் வரிப்பணத்தில் சுமார் 200 கோடிகள் ஜெயாம்மா-கருணா தாத்தாவுக்கிடையிலான சமச்சீர் கல்வி குடும்பச்சண்டையில் இவ்வாண்டு நாசமாகிவிட்டது. மக்களின் இரத்தத்தை உறிஞ்சி சேகரித்த 200 கோடி வரிப்பணத்தை நாசமாக்கியதற்குப் புண்ணியமாகவாவது இந்த மாணவருக்காக ஒரு 5 லட்சத்தை அரசு செலவு செய்ய முன்வரட்டும்.
0
...
எழுதியவர்: ஜ ரா ரமேஷ் பாபு , July 26, 2011
நண்பர் அருள் அவர்களுக்கு,

இந்தியாவில் கல்வி இலவசம் கிடையாது என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை அது அரசின் குற்றமும் இல்லை. இங்கே அரசு கல்விக்கு என்று உதவித்தொகை வழங்குகிறது, மேலும் பிணை இல்லா வங்கி கடனுக்கும் வழி வகை செய்கிறது.

மேலும் சில தனியார் நிறுவனங்கள் கல்விக்கு என்று உதவிகள் செய்து வருகின்றன. உதாரணம் அகரம் பௌண்டசன்.

இந்த சிறுவன் பற்றிய செய்தி நாளிதழ்களிலும் சில தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமே பலர் அந்த மாணவனுக்கு உதவி செய்ய முன் வந்து இருப்பார்களே? சிறு துளி பெருவெள்ளம் போல ரூ 1000 ஒருவர் உதவி செய்வதாக வைத்து இருந்தாலும் 100 பேர் செய்து இருந்தாலே ஒரு வருட படிப்புக்கு பணம் கிட்டி இருக்குமே. 500 பேர் சேர்ந்து செய்தால் அந்த மாணவரின் 4 1 / 2 வருட படிப்பிற்கான தொகை சேர்ந்து இருக்குமே!!??

இங்கே நான் பதிய விரும்புவது எல்லாம் எல்லாவற்றிற்கும் அரசை எதிர் பார்ப்பது தவறு மேலும் உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படலாம். மேலும் ஏதாவது உதவி வேண்டும் என்றால் நாம் தான் செல்ல வேண்டுமே ஒழிய நம்மை தேடி யாரும் வர மாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
0
...
எழுதியவர்: ஹுஸைனம்மா, July 26, 2011
’குடும்பத்தின் முதல் பட்டதாரி’ அடிப்படையில் அவருக்கு அரசு உதவி ஏன் கிடைக்கவில்லை?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்