அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளதாக தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 51 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு தடவை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதும் அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்குk கடந்த வாரம் அகவிலைப்படி 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதாவது 7 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்கும் என்று அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். அகவிலைப்படி உயர்வு தொடர்பான மத்திய அரசின் அரசாணை வராததால் தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்நிலையில், நேற்று தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக நிதித்துறையின் முதன்மை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசு ஆணையில் கூறி இருப்பதாவது:
"மத்திய அரசு ஊழியர்களுக்குக் கடந்த 1.7.2011 முதல் அகவிலைப்படி 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஆணையைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 1.7.2011 முதல் 58 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படும்.
இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு கல்வி மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல்காரர்கள், உதவியாளர்கள், மக்கள்நல பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும். பகுதிநேர அரசு பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
மாதம் ரூ.600 வரை தொகுப்பூதியம் பெறுவோருக்கு ரூ.20-ம், ரூ.600-க்கு மேல் பெறுவோருக்கு ரூ.40-ம் உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வு 1.7.2011 முதல் கணக்கிடப்படும்."
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கியதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ. சங்கம்) முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி நன்றி தெரிவித்து உள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




