தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இணையத்தளம் மற்றும் செல்போன் மூலம் பயணச் சீட்டு பதிவு முறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து 4 பயணிகளுக்குப் பயணச் சீட்டை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"ரயில்வே மற்றும் விமானத் போக்குவரத்து துறைகளில் இணையதளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்வது போன்றே முதன் முறையாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இணையதளம் மற்றும் கைபேசி வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதள முகவரி மூலம் இ-டிக்கட் முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இ-டிக்கட் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியினை எந்த நேரத்திலும் உலகின் எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் மூலமாகவும் மற்றும் கைபேசி வழியாகவும் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் எந்தவித சிரமும் இன்றி தங்களது பயணச்சீட்டினை இணையதளம் வாயிலாக கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்து கெள்ளவும் தாங்கள் விருப்பப்பட்ட பேருந்துகளையும் இருக்கைகளையும் தேர்வு செய்து கொள்வதுடன் பேருந்து கட்டணம், புறப்படும் நேரம் மற்றும் இதர விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும்.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது செயல்பட்டு வரும் 50 முன்பதிவு மையங்களுடன் கூடுதலாக புதிய முகவர்களை நியமித்து 300 முன்பதிவு மையங்களாக அதிகரிக்கப்படும். இந்த அதிகரிக்கப்படவுள்ள முன்பதிவு மையங்களுக்குப் பயணிகள் நேரடியாக சென்று இணையதள வசதியுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயணிகள் இ-டிக்கட் மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்தவுடன் அவர்களது கைபேசிக்கு பணப் பரிவர்த்தனை குறித்த குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இணையதளம் மற்றும் கைபேசி வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்து நான்கு பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இ-டிக்கட்டுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




