இரவு நேரத்தில் மின்சாரம் பல மணி நேரம் தடைப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசைக் கண்டித்து நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, அறிவிக்கப்படாமல் பல மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
இந்நிலையில் நேற்று சென்னை வடபழனி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு வெகு நேரமாகியும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சீர்செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்திலேயே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகள் மொத்தமாக பாதிக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டனர். மாலை முதல் மின்சாரம் இல்லாததால், வெப்பம் தாங்க முடியாமல் வீதியிலேயே நிற்பதாகவும் கடந்த 3 நாட்களாக மின்சாரம் சரியாக வரவில்லை என்றும், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டால், அவர்கள் பதில் பேசாமல் தொலைபேசியைக் கீழே வைத்துவிடுவதாகவும் மறியலில் ஈடுபட்டோர் குற்றம்சாட்டினர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




