நெல்லை மேயர், உள்ளாட்சி தலைவர்கள் நாளை (25ம் தேதி) பதவியேற்கின்றனர். பதவியேற்பை முன்னிட்டு தடபுடல் விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயராக அதிமுகவைச் சேர்ந்த விஜலா சத்யானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா 25ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
முதலில் மேயருக்கும், பின்னர் 55 வார்டுகளின் கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நெல்லை மாநகராட்சியில் தீவிரமாக நடந்து வருகின்றன. பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர், கவுன்சிலர்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் மாநகராட்சியில் தடபுடலாக நடந்து வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர்கள், 36 டவுன் பஞ். தலைவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காயல்பட்டினம், கோவில்பட்டி நகராட்சி தலைவர்கள், 19 டவுன் பஞ். தலைவர்களும் நாளை காலை பதவியேற்கின்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் நடக்கிறது. நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சிகளின் கமிஷனர்களும், டவுன் பஞ்சாயத்துகளுக்கு அந்தந்த டவுன் பஞ்சாயத்துகளின் செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர். முதலில் தலைவர்களும், பின்னர் கவுன்சிலர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.
பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அந்தந்த உள்ளாட்சிகளில் கோலாகலமாக நடந்து வருகின்றன. இதனால் உள்ளாட்சிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன. பதவியேற்பை முன்னிட்டு பல்வேறு உள்ளாட்சிகளில் தடபுடலான விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஹோட்டல்களில் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக பதவியேற்பு விழா நடப்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

எழுதியவர்: paranjothi,kuwait, October 25, 2011
| < முந்தையது | அடுத்தது > |
|---|




