இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அவசரப்படும் பத்திரிக்கை துறை, அவதிப்படும் பொது மக்கள்!

E-mail அச்செடுக்க

குண்டு வெடிப்பு உட்ப‌ட‌ ப‌ர‌ப்ப‌ர‌ப்பு செய்திக‌ளில் ப‌த்திரிக்கை துறையின் மோச‌மான‌ அவ‌ச‌ர‌த்தால் ஏராளமான‌ அப்பாவிக‌ள் பாதிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் ந‌ட‌ந்துள்ள‌து.

இது குறித்த‌ விப‌ர‌ம் வ‌ருமாறு:

மார்த்தாண்டம் அருகே உள்ள பாலவிளை பகுதியில் வசித்து வந்த ஜெய கென்னடி என்பவரின் வீட்டினை கடந்த சில தினங்களுக்கு முன்னால் மர்ம நபர் ஒருவர் காவல்துறைக்குத் தொலைபேசியில் அளித்தத் தகவலின் அடிப்படையில் சோதையிட்டபோது வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கைகளில் மதுரையில் அத்வானி ரத யாத்திரையின் போது வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்துடன் இது தொடர்பு படுத்தப்பட்டு பரப்பரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் கென்னடி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

பத்திரிக்கையில் வந்த வெற்று பரப்பரப்பை நம்பிய சிறப்பு புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜி. ஜாண் நிக்கல்சன் மற்றும் உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில் கென்னடிக்கும், இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. எனவே விசாரணையை வேறு கோணத்தில் காவல்துறையினர் திருப்பினர்.

கென்னடியிடம் விசாரணை நடத்தியபோது, ஏற்கனவே ஊரில் இருந்து வந்த 3 வது நாளில் தனக்கு மிரட்டல் வந்ததாக தெரிவித்தார். எனவே அவருக்கு மிரட்டல் வந்திருந்த மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்ட போது, கென்னடி மனைவி விஜுக்குக் கள்ளக்காதலன் இருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்திய போது, கள்ளக்காதலன் உதவியோடு, விஜு மற்றும் அவரது தாயார் உள்பட 4 பேர் சேர்ந்து கென்னடியைக் காவல்துறையில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடி மருந்தை அவர் வசித்த வீட்டில் மறைத்து வைத்தது தெரிய வந்தது.

அதன் பேரில் விஜு, அவரது தாயார் ரோஸ்லின், விஜுயின் கள்ளக்காதலன் ஆஸ்டின் ஜெயராஜ் (29), அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி என்ற பூபதி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்டின் ஜெயராஜின் மற்றொரு நண்பர் ஜஸ்டின், இவர்களுக்கு வெடி மருந்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இவரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். குலசேகரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து வெடி மருந்தை வாங்கி இருந்தது தெரிய வந்தது.

தற்போது கைதானவர்களில் கள்ளக்காதலன் ஆஸ்டின் ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி ஆகியோர் பாளை சிறையிலும், விஜு மற்றும் அவரது தாயார் தக்கலை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று இவர்கள் திருச்சி பெண்கள் சிறைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.

கைதான விஜு காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

"குமரி மாவட்டம் சாமியார்மடம் காட்டுவிளையைச் சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஆஸ்டின் ஜெயராஜ் பல்வேறு வகையில் எங்கள் குடும்பத்துக்கு உதவி செய்துள்ளார். நான் அவருடன் பழகுவது எனது கணவருக்குப் பிடிக்க வில்லை. அவர் என்னை இது தொடர்பாக கண்டித்து கொண்டே இருந்தார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர் ஊருக்கு வந்தார். அவர் வந்த பிறகு நானும், ஆஸ்டின் ஜெயராஜூம் சந்தித்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ள முடியாதபடி எனது கணவர் என்னைக் கண்காணிக்க தொடங்கினார். ஆஸ்டின் ஜெயராஜ் பெயரைக் கூறி என்னை சித்ரவதையும் செய்தார். கணவர் வந்த பிறகு, நான் ஆஸ்டின் ஜெயராஜுடன் பேச முடிய வில்லை. நாங்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருக்க முடிய வில்லை. எனது நிலையை ஆஸ்டின் ஜெயராஜிடம் போனில் பேசி விளக்கினேன்.

என் கணவர் வெளிநாடு செல்லும் திட்டத்தையும் தள்ளி வைத்தார். எனவே இவரிடம் இருந்து பிரிய வேண்டும் என முடிவு செய்தேன். இது தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்த வேளையில்தான் மதுரையில் அத்வானி ரத யாத்திரை பாதையில் வெடி மருந்து பொருட்கள் சிக்கிய செய்தி வந்தது. முதலில் கஞ்சாவை வீட்டில் வைத்து, அதில் கணவரைச் சிக்க வைக்க எண்ணினோம். ஆனால் கஞ்சா கிடைக்காததால், வெடி மருந்தையே வைக்க முடிவு செய்தோம். ஆஸ்டின் ஜெயராஜ் அவரது நண்பர்கள் உதவியோடு வெடி மருந்தை வாங்கி வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தென்னந்தோப்பில் வீசி சென்று விட்டார்.

நானும் எனக்கு எதுவும் தெரியாதது போல் கணவருடன் படுத்துக் கொண்டேன். காவல்துறையினர் வந்து விசாரித்த போதும் நான் எதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தேன். இருப்பினும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் இவ்வளவு துரிதமாக விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்க வில்லை.

எனது மொபைல் போனைக் கேட்கும் போதே, நாம் சிக்கி விடுவோம் என நினைத்தேன். நான் நினைத்தப்படி காவல்துறையினர் எங்களைப் பிடித்து விட்டனர். நானும், ஆஸ்டின் ஜெயராஜும் நட்புடன் தான் இருந்தோம். இந்தச் சம்பவத்தை நினைத்து இப்போது மிகவும் வருந்துகிறேன். நான் பெரிய துரோகம் செய்து விட்டேன்."

இவ்வாறு அவர் கூறி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஆஸ்டின் ஜெயராஜ் நண்பர் ஜஸ்டின், கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.

பத்திரிக்கை துறையின் போலி பரப்பரப்பு செய்தியால் கென்னடியைப் போன்ற அப்பாவிகள் பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இனியாவது வெறும் பரப்பரப்பை நம்பாமல் உண்மையான செய்திகளை மட்டும் வெளியிட தமிழக பத்திரிக்கைகள் முன்வருமா?

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: seyed, November 03, 2011
வரவே வராது ஏன் என்றால் பின்னால் இருந்து இயக்குபவர்களுக்கு துரோகமிழைத்தால் நிதி கிடைக்காது திதி தான்!

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்